வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களின் படத்திற்கு விளக்குமாற்றால் அடித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 930 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களே குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை. இனி சர்வதேச விசாரணையும் இல்லை. உள்நாட்டு விசாரணையும் இல்லை. தமிழ் மக்கள் கோத்தபாயவிற்கு வாக்களிக்க வேண்டும் என வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் வவுனியாவில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
குறித்த கருத்தை வன்மையாக கண்டித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வரதாராஜபெருமாள் அவர்களின் படத்தினை ‘தமிழர் இரத்தம் குடிக்கும் ஒட்டுக்குழு வரதர்’ என குறிப்பிட்டு காட்சிப்படுத்தி, அப் படத்திற்கு சாணித் தண்ணீரில் விளக்குமாற்றை தோய்த்து அடித்து தமது கோபத்தை வெளிப்படுத்தினர். அத்துடன் முன்னாள் முதலமைச்சரை திட்டியும் தீர்த்துள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அதற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும்.
எமது பிள்ளைகள் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் போராட்டக் களத்தில் நாம் தினமும் செத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் எமது பிள்ளைகள் காணாமல் போனபோது அரசுடனும், இந்தியாவுடனும் இணைந்து ஒழித்திருந்த ஒட்டுக்குழு வரதர் தற்போது எமது பிள்ளைகளை இல்லை எனக் கூற என்ன அருகதை இருக்கிறது.
குறித்த வரதரின் மகள், மனைவி காணாமல் போயிருந்தால் இப்படி சொல்லியிருப்பாரா? என தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன், தமது போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் கண்ணீர் மல்க கோரியுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment